பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து உடனடியாக செயல்படுத்தக் கோரி மனு:.

0
6

அனுப்புநர்:
டாக்டர் எம்.டி. தயாளன் பரதவர் ko
தலைவர், இந்திய மீனவர் சங்கம்
எண்: 266, சூரிய நாராயண செட்டி தெரு,
இராயபுரம், காசிமேடு,
சென்னை – 600 013.
இணையதளம்: www.indianfisherman.org
செல்: 9080707673.

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

பொருள்: தமிழக வெற்றி கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து உடனடியாக செயல்படுத்தக் கோரி மனு.

மாண்புமிகு ஐயா,
வணக்கம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும், ஏற்றுமதி வருவாய்க்கும் பாரம்பரிய மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இயற்கை சீற்றங்கள், பருவகால மீன்பிடித் தடை, எரிபொருள் விலை உயர்வு, கடல் எல்லைப் பிரச்சினைகள், காலநிலை மாற்றம் மற்றும் வருமான இழப்பு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்தைத் தொடர்கின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகம் தனது 2026 தேர்தல் அறிக்கையில் மீனவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய பல முக்கியமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அவை நிறைவேற்றப்படும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் தமிழகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எனவே, நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டு உடனடியாக செயல்படுத்துமாறு இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கைகள்:
1)மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
2)மீனவர்களுக்கென “தாய் வீட்டு வசதி திட்டம்” அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
3)மீனவர் விபத்து காப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்.
4)விசைப்படகுகளுக்கு மானிய விலையில் 3,600 லிட்டர் டீசல் வழங்க வேண்டும்.
5)கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
6)கடல்சார் தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்.
7)ஆழ்கடல் மீனவர்களுக்கு வட்டி இல்லா கடன் திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும்.
8)மீனவர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த தனி கடல்சார் விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும்.
9)கடல் அரிப்பு மற்றும் அலைச்சீற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
10)மீனவர்களின் வருமானத்தைப் பாதுகாக்க குறைந்தபட்ச மீன் ஆதார விலையை அரசு நிர்ணயித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, மாநிலத்தின் கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான மீனவ மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட பத்து அம்சங்களையும் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து, விரைவாக செயல்படுத்திட மாண்புமிகு தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
(டாக்டர் எம்.டி. தயாளன் பரதவர்)
தலைவர்,
இந்திய மீனவர் சங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here