கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ பயணியர் விமானம், பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில், பலியானோரின் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து, விசாரணை நடத்தி வரும் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள், விமானத்தில் உள்ள, ‘கருப்புப் பெட்டி’யை கண்டெடுத்துள்ளனர். இதன்மூலம், விரைவில், விபத்து நேர்ந்ததன் காரணம் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மத்திய அரசின், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின், ‘போயிங் – 737’ விமானம் ஒன்று, நேற்று முன்தினம் வந்தது. இதில், 184 பயணியர் உட்பட, 190 பேர் இருந்தனர். 18 பேர் பலிஇந்த விமானம், மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, தரை இறங்கியது.அப்போது, பலத்த மழை பெய்ததால், ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, அங்கிருந்த, 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, விமானம், இரண்டு பாகங்களாக பிளந்து விபத்துக்குஉள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.
இதில், விமானத்தின், ‘பைலட்’டுகளான கேப்டன் தீபக் சாத்தே, அகிலேஷ் சர்மா இருவரும் உயிரிழந்துள்ளனர்.இவர்களைத் தவிர, விமானத்தில் இருந்த பணியாளர்கள், நான்கு பேர், சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 149 பயணியர்,மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 23 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து குறித்து, விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று மீட்கப்பட்டுள்ளது.
விமான தகவல்கள் மட்டுமல்லாமல், பைலட்டுகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையஅதிகாரிகளுக்கு இடையே நடந்த உரையாடல்களும், கருப்புப் பெட்டியில் பதிவாகி இருக்கும். இது, விபத்து நேர்ந்த தன் காரணத்தை கண்டு பிடிக்க உதவும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முயற்சி தோல்விமுதற்கட்ட விசாரணையில், விமானம், இரண்டாவது முறையாக தரையிறங்கியபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கன மழைக்கு மத்தியில், பைலட், விமானத்தை தரையிறக்க எடுத்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, இரண்டாவது முறையாக தரையிறக்க முயற்சித்தபோதும், ஓடுபாதையில், விமான டயர்கள் சறுக்கியுள்ளன.
இதையடுத்து, விமானத்தை மேலே எழுப்ப, பைலட் முயற்சித்துள்ளார்.அப்போது, அவரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோரில், பெரும்பாலானோர், விமானத்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தோர் என தெரிய வந்துள்ளது.இதற்கிடையே, மத்திய விமான போக்குவரத்து தொடர்ச்சி 10ம் பக்கம்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விபத்து நிகழ்ந்த கரிப்பூர் விமான நிலையத்திற்கு, நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன், மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளீதரனும் உடனிருந்தார்.
இதையடுத்து, நிருபர்களிடம் பேட்டியளித்த ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, இடைக்கால நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவோருக்கு, 2 லட்சம் ரூபாயும், சிறு காயமடைந்துள்ள மக்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும், இழப்பீடாக வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரிக்கு நேரில் சென்ற, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், அங்கு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு,10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என, கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும், சிகிச்சைப் பெற்று வருவோரின் மருத்துவ செலவுகளை, மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் அர்விந்த் சிங் நேற்று கூறியதாவது:இந்த விமான விபத்து குறித்து, விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்ததும், விபத்துக்கான காரணம் தெரியவரும். அதில், தவறு நேர்ந்திருப்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். இந்த விமான விபத்து குறித்த தகவல்களை பெறுவதற்கு, துபாயில் உள்ள இந்திய துாதரகம், நேற்று முழுதும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.2 பயணியருக்கு தொற்றுஇந்த விமான விபத்தில் உயிரிழந்த, சுதீர் வர்யாத், 45, என்ற பயணி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதேபோல், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பயணி ஒருவருக்கும் தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட அனைவரும்,வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிக்., 21 போர் விமான ‘பைலட்’விபத்தில் உயிரிழந்த விமான பைலட், கேப்டன் தீபக் சாத்தே, மிகவும் பயிற்சி பெற்றவர் ஆவார். இவர், இதற்கு முன், இந்திய விமானப்படையின் மிக்., 21 ரக போர் விமானத்தின் பைலட்டாக இருந்தவர். விமானப்படை பள்ளியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த சாத்தே, முன்கூட்டியே அதிலிருந்து ஓய்வுபெற்று, ஏர் இந்தியாவில் இணைந்தார். கேப்டன் தீபக் சாத்தே, ஜனாதிபதியிடம் இருந்து, தங்கப் பதக்கம் பெற்றவர். கேரள மக்களுக்குமுதல்வர் பாராட்டுகேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியதாவது:மீட்புப் பணிகளில், உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகளும் துரிதமாக ஈடுபட்டனர். அவர்களால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மோசமான வானிலை, கொரோனா பரவல் போன்றவற்றால் பின்வாங்காமல், களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுபோன்ற இன்னல் சம்பவங்களில், கேரள மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவதை, நாம் பலமுறை கண்டுள்ளோம். இந்நேரத்தில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.10 ஆண்டுகளுக்கு பின் விபத்துகடந்த, 2010ம் ஆண்டு, கர்நாடகாவின் மங்களூரில், இதேபோல், பயணியர் விமானம் ஒன்று, ஓடுபாதையில் சறுக்கி, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த கோர சம்பவத்தில், 158 பேர் உயிரிழந்தனர்.எட்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். விமானத்தில் தீ மளமளவென பரவியதால், அதிக உயிரிழப்புகள் நேர்ந்ததாக கூறப்படுகிறது. மங்களூரு விமான நிலைய ஓடுதளம், மலைக்கு மேல் இருக்கும். ‘டேபிள் டாப்’ எனப்படும் இதே அமைப்பு தான், கோழிக்கோடு விமான நிலையத்திலும் உள்ளது.’பைலட்’டுக்கு பயணி புகழாரம்இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி இப்ராஹிம் என்பவர் கூறியதாவது:விமானம் தரையிறங்கும்போது, கன மழை பெய்தது. இந்நிலையில், பைலட் தீபக் சாத்தே, ஓடுதளத்தில் தரையிறக்க, இரண்டு முறை முயற்சித்தார். எனினும், அவரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று பள்ளத்தில் விழுந்தது. உயிரிழந்த பைலட் சாத்தேவால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.பிறந்த நாள் பரிசாக கிடைத்த துயரம்உயிரிழந்த பைலட் தீபக் சாத்தேவின் தாயார், நீலா சாத்தேவிற்கு நேற்று, 84வது பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாளை கொண்டாட, தீபக் சாத்தே திட்டமிட்டிருந்துள்ளார். இது குறித்து, கடந்த, 6ம் தேதி, தீபக் சாத்தே, தன் அண்ணன் மகனை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கடந்த மார்ச் மாதம், தன் மகனை கடைசியாக பார்த்த நீலாவுக்கு, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பயணியர் விபரங்கள் வெளியீடுவிமான விபத்தில் உயிரிழந்த, 16 பயணியரின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், ராஜீவன் செரக்கப்பரம்பில், 61, மனல் அகமது, 25, ஷராபுதீன், 35, ஜானகி குன்னோத், 55, அசான் முகமது செம்பை, 1, ரம்யா முரளீதரன், 32, சிவாத்மிதா, 5, ஷெனோபியா, 40, மற்றும் ஷஹீரா பானு, 29, ஆகியோர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.முகமது ரியாஸ், 24 மற்றும் ஆயிஷா துவா, 21, இருவரும், பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். ஷஹீர் சையது, 38, லைலாபி, 51, சாந்தா மரக்காத், 59, சுதீர் வரியாத், 45, மற்றும் ஷேசா பாத்திமா, 21, மலப்புரத்தைச் சேர்ந்தவர்கள்.













