கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் ரம்யா. எம்.எஸ்சி பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவரை இரண்டு வருடமாக காதலித்த கடலூர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரம்யாவை கடந்த மாதம் 6-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.காதல் கணவனின் வீட்டிற்கு சென்ற பின்னர் தான் காதலன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது புதுப்பெண் ரம்யாவுக்கு தெரியவந்தது. அப்போதைக்கு ரம்யாவை சமாதனம் செய்த கார்த்திகேயன், வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறியதோடு, இல்லையென்றால் தான் வீட்டில் கழிவறை கட்டிவிட்டு அழைத்துச்செல்கிறேன் எனக்கூறி திருமணமான மறு நாளே ரம்யாவை அவரது தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.தனது வீட்டில் கழிப்பறை கட்டவோ, கழிப்பறை உள்ள வேறு வீட்டிற்கோ அழைத்து செல்லவோ நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஏமாற்றுவது குறித்து கார்த்திகேயனிடம், கேட்டதால் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கழிப்பறை இல்லாத கணவன் வீட்டில் எப்படி குடித்தனம் நடத்துவது? என்ற விரக்தியில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகின்றது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ரம்யாவின் தாய் மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே ஆவதால், இந்த சம்பவம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரித்து வருகிறார்.
R














