உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜனவரி 28-ந்தேதி தொடங்கி கடந்த 4-ந்தேதி முடிவடைந்தது. 5-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மேலும் வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணி வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.
அன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளுக்கே சென்று பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது. பூத் சிலிப் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகே பூத் சிலிப் வினியோகம் செய்யப்படும்.
















