விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், நடிகை கௌதமி, பாஜக நிர்வாகிகள் சுமதி வெங்கடேசன், காயத்ரி ரகுராம், சங்கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில கலை, கலாச்சார பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், திருமாவளவனுக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டதாகவும், இனி திருமாவளவனை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், அவரின் தொகுதிக்கு சென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது என்ற காரணத்துக்காகவே நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகை கௌதமி, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பெண்களை மதிப்பதை திருமாவளவனின் அரசியல் லாபத்துக்காக துளியும் விட்டுத்தரக் கூடாது என்றும், திருமாவளவன் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்கள் சிலர் திருமாவளவனின் கொடும்பாவியை எரித்தும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து பரபரப்பு நிலவியது.
















