ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் லால் கடுலியா (வயது 40). போதைக்கு அடிமையான இவர் கடந்த 11-ந்தேதி வீட்டில் தகவல் தெரிவிக்காமல் உதைப்பூர் சென்றுள்ளார். தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் அவரது மனைவி, கணவரின் சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.
ஓம்கார் தானாகவே கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை எடுக்க மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அதேவேளையில் கோவர்தன் பிரஜாபத் என்பவர் மோகி என்ன இடத்தில் இருந்து அரசு நடத்தும் ஆர்.கே. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோவர்தன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
அவரது உடலை வாங்க உறவினர்கள் யாரும் வரவில்லை. மூன்று நாட்களாக யாரும் வராததால், மருத்துவமனையில் இருந்து காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத இறந்த உடல் ஒன்று உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த உடலின் போட்டோவை வெளியிட்டு, உறவினர்கள் இருந்தால் உடலை பெற்றுக்கொள்ளலாம் என விளம்பரம் செய்துள்ளனர்.
அவரது உடலைப் பார்த்த ஓம்கார் கடுலியாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று உடலை பார்த்துள்ளனர். அப்போது அவரின் வலது கை, அதில் இருந்த வடுக்கலை பார்த்து, ஓம்கார்தான் எனத் தெரிவிக்க, மருத்துவமனையில் டிஎன்ஏ, உடற்கூறு பரிசோதனை செய்யாமல் உடலை கொடுத்துள்ளனர்.
அவர்கள் உடலை பெற்றுக்கொண்டு கடந்த 15-ந்தேதி எரியூட்டியுள்ளனர். போதைக்கு அடிமையானவர் இறந்து விட்டார் என்ற கவலையை கொஞ்சம் கொஞ்சமான உறவினர் மறந்து வந்த நிலையில், கடந்த 23-ந்தேதி ஓம்கார் வீட்டிற்கு வந்து உறவினர்கள் முன் ஜம்மென்று நின்றுள்ளார்.
இறந்து போனவர் எப்படி உயிரோடு வந்தார் என உறவினர்களுக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி. பின்னர்தான் மருத்துவனையில் இறந்தவர் வேறு நபர். அவருடைய உடலை தவறுதலாக பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்கு செய்துவிட்டோம் என உணர்ந்தனர்.
உடனடியாக போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். எங்களுடைய தவறு ஏதும் இல்லை என போலீசார் தெரிவிக்க, மருத்துவமனையில் பிணவறையில் உள்ள ஸ்டாஃப்களுக்கும், மருத்துவமனை நர்ஸ்களுக்கும் இடையில் நடந்த குழப்பம்தான் இதற்கு காரணம். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.















