வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும், ஏற்பாடு செய்துதரும் பல்வேறு நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மைகள் பற்றி முழுமையாக தெரியாது. செய்தித்தாள்களில் வரும் செய்திகளே இதற்கு சாட்சி. பணம் வாங்கிக்கொண்டு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. மேஸ்திரி என்றுதான் என்னை வேலைக்கு எடுத்தார்கள். ஆனால், அங்கு என்னை வீட்டு வேலைக்கு அனுப்பிவிட்டார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்துகொண்டே இருப்பதால்தான், அம்மாதிரியான தகவலை தொகுத்து தர யோசித்தோம்.
சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும், பட்டதாரிகள், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஏதேனும் தொழில்பயிற்சி படிப்பு படித்தவர்கள் இப்பஐ பல்வேறு தரப்பட்டவர்களுக்கும் சொல்ல விரும்பும், அறிவுறுத்தும் விஷயங்கள் இவைகள்தான்.
வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் உங்கள் எண்ணங்கள் தவறில்லை. ஆனால், நீங்கள் முயற்சிக்கும் முயற்சி சரிதானா? வெளிநாட்டு வேலைக்காக நீங்கள் அணுகியிருக்கும் நிறுவனம் உண்மையானதுதானா என்ற பல்வேறு கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுவிட்டு அதற்குப் பிறகு அவர்களிடம் உங்களைப் பற்றிய தகவலை தெரிவியுங்கள்.
எடுத்த எடுப்பிலேயே 50ஆயிரம் கொடு, ஒரு லட்சம் கொடு என்று கேட்கும்பட்சத்தில் நீங்கள் அணுகியிருக்கும் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனம் முற்றிலும் பொய்யானது என்பதை உறுதியாக தெரிந்துகொள்ளுங்கள்.
வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புவதற்காக இயங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் பணம் சம்பாதிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான். அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. வெளிநாட்டுக்கு சென்று எப்பஐ லட்ச லட்சமாக சம்பாதிக்கவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ அதே மாதிரி, உங்களை பத்திரமாக வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதன் மூலம், உங்களிடம் இருந்தும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் சேவைக்கட்டணமாக ஒரு தொகை வாங்குவதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், விசா கொடுப்பதற்கு முன்பே, ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று பணம் வாங்குவது, குற்றம்.
உண்மையான நிறுவனம் என்று எது?
எல்லோருக்கும் அடிப்படையில் எழும் கேள்விதான். வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தின் உண்மைத் தன்மையை எப்பஐ தெரிந்துகொள்வது என்பதுதான் நம் மனதில் எழும் அடிப்படை கேள்வியாக இருக்கும். வாடிக்கையாளர்களை ஏமாற்றமால் அவர்களை வேலைக்கு மட்டும் அனுப்பும் பணியை செய்யும் நிறுவனங்கள், முதலில் உங்களிடம் இருந்து அடிப்படை சேவைக்கட்டணமாக ரூ. 2000 முதல் 3000 வரை பெற்றுக்கொண்டு, வாடிக்கையாளரின்அடிப்படைத் தகவல்களை சேகரித்துக்கொள்ளும். அதாவது, பெயர் முகவரி, தொடர்பு எண், மெயில் முகவரி, என்ன பணி, கல்வித் தகுதி இப்பஐ எல்லாவற்றையும் சேகரித்துக் கொள்ளும். இதற்கு வசூலிக்கும் தொகைதான் ரூ.2000 முதல் 3000 வரை. இந்தப் பணம் எதற்காக வென்றால், உங்களைப் பற்றிய அடிப்படை தகவல்களை வெளிநாட்டிற்கு அனுப்பி அங்கிருக்கும் வேலை காலியிடங்களை உங்களுக்கு தகவலாக தெரிவிக்கும். அந்த சமயத்தில், இப்போது எனக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறும்பட்சத்தில், அவர்கள் செய்த முயற்சிகள் யாவும் வீணாகும் என்பதற்காக அந்த அடிப்படை கட்டணத்தை கட்டாயமாக செலுத்தித்தான் ஆக வேண்டும்.
அடுத்த கட்டமாக உங்களிடம் இருந்து உங்களைப் பற்றி அடிப்படை விவரங்களை தவிர்த்து அசல் சான்றிதழ், அசல் பாஸ்போர்ட் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிலிருந்தே அவர்களின் உண்மைத் தன்மையை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். உங்களிடம் பெறும் விவரங்கள் அனைத்தும் நகல் வடிவில் (ஜெராக்ஸ்) பெறுவார்களே தவிர ஒரிஜினல் பெற மாட்டார்கள். இந்தத் தகவலை பெற்றுக்கொண்ட பத்து நாட்களில் இருந்து இருபது நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு மெயில் வடிவிலோ, போன் மூலமாகவோ வேலை பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்களை சொல்வார்கள்.
உங்களுக்கு அவர்கள் சொல்லும் பணியில் உடன்பாடு இருக்கும்பட்சத்தில், உங்களை நேரில் அழைப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களிடம் அசல் பாஸ்போர்ட் விவரங்களை கொடுக்க வேண்டியதிருக்கும். அந்த நேரத்திலும் நீங்கள் அவர்களிடம் பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. அதிலிருந்து ஓரிரு வாரங்களுக்குள், வெளிநாட்டில் இருந்து சம்பந்தடப்பட்ட வாடிக்கையாளருக்கு நேரடியாக அழைப்பு வரும். அதில் உங்களைப் பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்துகொள்வதோடு, உங்கள் சுய விருப்பத்தின் பேரில்தான் வெளிநாடு வேலைக்கு செல்கிறீர்களா என்பதையும் வெளிநாட்டு நிறுவனம் ஊர்ஜிதம் செய்துகொள்ளும்.
உங்களுடைய சம்மதம் விருப்பம் அவர்களுக்கும் திருப்தி ஏற்படும் பட்சத்தில், அதிலிருந்து ஓரிரு வாரங்களில் உங்களுக்கான விமான டிக்கெட், அந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அல்லது ஓராண்டு பணிபுரிவதற்கான விசா அனைத்தும் நேரடியாக வாடிக்கையாளருக்கே வந்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும், அலுவலகத்திற்கு போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விமான டிக்கெட் கட்டணம் கூட பல்வேறு நிறுவனங்கள் கொடுத்துவிடுகின்றன.
உங்களுக்கு விசா, டிக்கெட் அனுப்பிய தகவலை உங்களுக்கு மட்டுமல்லாது, உங்களுக்கு இந்த வேலையை ஏற்பாடு செய்து தரும் அந்த அலுவலகத்திற்கும் தெரிவித்து விடுவார்கள். அதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். அவர்களிடம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அசல் விசாவைக் காட்டி, அலுவலகத்தில் வாடிக்கையாளர் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த ஒரிஜினர் பாஸ்போர்ட் வகையறாக்களை பெற்றுக்கொள்ளலாம். அந்த நேரத்தில் சேவைக் கட்டணமாக வாடிக்கையாளரின் வெளிநாட்டில் பெறப்போகும் ஒரு மாத சம்பள தொகை அல்லது அதற்கு குறைச்சலான தொகையை பெற்றுக்கொள்வார்கள். அதை வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக கொடுத்துதான் ஆக வேண்டும்.
வெளிநாடு செல்லும் விரும்பும் வாடிக்கையாளர்கள் உண்மையான தனியார் ஏஜென்சிகளை அணுகும்போது நிச்சயம் இந்தப் படிநிலைகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.
அதுபோல, வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல விரும்பும் விண்ணப்பதாரர்கள் அடிப்படையான சில விஷயங்களில் கவனமுடன் இருப்பது சிறந்தது. இப்போது வெளிநாட்டில் இருந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளக்கூடிய நிறுவனம், இமெயில் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள் என்பதால், வாடிக்கையாளர்கள், தெளிவான இமெயில் முகவரியை உருவாக்கிவைத்திருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல், மொபைல் போனில் ஸ்கைப் பயன்படுத்த தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பு.
ஏனெனில் வெளிநாட்டில் இருந்து வரும் பெரும்பாலான அழைப்புகள் ஸ்கைப் மூலம் வருவதால், அதில் பதில் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
எந்த நாட்டிற்கு வேலைக்குச் செல்ல விரும்புகிறீர்களோ அந்த நாட்டின் சட்ட திட்டங்கள், அங்கு பயன்படுத்தும் மொழி, பாரம்பரியம், கலாசாரம், உணவு முறைகள் இவைகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் எந்த ஒரு ஆதாரத்தையும், பள்ளி சான்றிதழ், பாஸ்போர்ட் சான்று, மார்பளவு புகைப்படம் இப்படி சகல விஷயங்களையும், மெயிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இவை எப்போதும் உங்களுக்கு பயன்படும்.










