வாக்கு எண்ணிக்கைக்கு தடை – தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் எச்சரிக்கை;

0
335

வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாது. கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்’ என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார்.

வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

“அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா பரவலுக்கு காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பிற்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்பு தரப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here