புதிய வகை கொரோனா வைரசை தடுப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை;கலெக்டர்கள், மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை

0
221

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு கொண்டு வரப்பட்டது.

அதன்பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததால் ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதங்களாக கொரோனா தாக்கம் கணிசமான அளவிற்கு குறைந்ததால் 90 சதவீத கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன.

இந்தநிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வீரிய சக்தியுடன் பரவி வருவது கடந்த மாதம் தெரிய வந்தது. இந்த வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இங்கிலாந்துடன் பெரும்பா லான நாடுகள் தொடர்பை துண்டித்து உள்ளன.

இந்தியாவில் இருந்தும் இங்கிலாந்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் பட்டியலிடப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிப்பு வளையத்துக் குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 170ஆக உயர்ந்துள்ளது. நேற்று சுமார் ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். என்றாலும் இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களில் 13 பேருக்கும், அவர்களுடன் பழகியவர்களில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் சற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதித்து இருக்குமோ என்ற அச்சத்துக்கும் மற்ற பரிசோதனைக்கு இன்று அல்லது நாளை விடை கிடைத்து விடும். இதற்கிடையே வருகிற 31-ந் தேதியுடன் தமிழக அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பது பற்றி அவர் ஆய்வு செய்தார். எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி கேட்டறிந்தார்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்யலாமா என்பது பற்றியும் கலெக்டர்களிடம் முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை போன்றவை வர இருப்பதால் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கலந்து ஆலோசனை நடத்தி னார்.

இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். புதிய வகை கொரோனா பற்றி அப்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்துள்ள வீரியம் மிக்க கொரோனாவால் பாதிக்கப்படும் பட்சத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று முதல்- அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார்.

தமிழகத்தில் புதிய வகை கொரோனா ஊடுருவாமல் இருக்க செய்யவும், தடுக்கவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நிபுணர்களிடம் கருத்துக்களை கேட்டார். அதோடு கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் மேலும் பரவாமல் இருக்க எத்தகைய விழிப் புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வது என்பது பற்றியும் ஆலோசித்தார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பது பற்றி திருப்தி தெரிவித்த மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் அவசியம் என்று வலியுறுத்தினார்கள். குறிப்பாக முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இன்னும் 4 மாதத்தில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வர உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர். கட்சி பணிகளில் ஈடுபடும் தொண்டர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அதற்கேற்ப கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு வரக்கூடாது என்பதால் மேலும் சில தளர்வுகளை கொண்டு வரலாமா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக சென்னையில் ஜனவரி மாதம் பிரமாண்டமாக புத்தக கண்காட்சி நடைபெறும்.

இந்த கண்காட்சியை திட்டமிட்டப்படி நடத்த முதல்-அமைச்சரிடம் அனுமதி கேட்க வேண்டும். 500 புத்தக அரங்குகளுடன் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கண்காட்சி என்பதால் அதற்கு அனுமதி அளிப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் நிபுணர்களுடன் முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டார்.

புதிய வகை கொரோனா வைரசை தடுப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு சில அம்சங்களை சேர்க்க இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சில புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளார்.

இன்று மாலை அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். நாளை முதல் 3 நாட்களுக்கு அவர் நாமக்கல்லில் தொடங்கி தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார். எனவே புதிய தளர்வுகள் தொடர்பான அறிவிப் புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here