சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார்குடியின் முன்னாள் ஒன்றிய தலைவர் பி.பாஸ்கரவள்ளி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.பூபதி, நகர செயலாளர் ஜி.மீனாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மாலா பாண்டியன், ஒன்றிய தலைவர் ஆர்.வனிதாதேவி, நகர தலைவர் கே.மல்லிகா, நகர பொருளாளர் என்.பரிமளா, ஒன்றிய துணை செயலாளர் வி.ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட வேண்டும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பெண்கள் பணி செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். மதுபான கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பும், அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன












