சென்னை ஆர்கே நகர் பகுதியில் அதிகளவில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து ஆய்வாளர் கொடிராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி முழுவதும் போதை மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை தனிப்படை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர்.
இந்நிலையில் தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி ஆட்டோவில் லோடு ஏற்றியவர்களை விசாரணைக்காக அழைத்தனர். போலீசை பார்த்த உடன் அங்கிருந்த 6 பேரும் தப்பி ஓடி முயன்றனர்.
உடனடியாக போலீசார் தப்பி ஓடியவர்களில் 2 பேரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இருவரும் மணிகண்டன், ரமேஷ் என்பதும், மேலும் அவர்கள் ராஜன் என்பவர் தலைமையில் ஆந்திராவில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை ஆர்கே நகர் பகுதியில் விற்பனை செய்து வந்ததும், அவ்வாறு வாங்கி வந்த புகையிலை பொருட்களை ராஜன், செல்லப்பாண்டி, முருகன், ரமேஷ் ஆகியோருடன் பிடிபட்டவர்கள் இணைந்து ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அங்கிருந்து 140 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.












