யு.ஜி.சி. திருத்தங்களை திரும்பப்பெறக்கோரும் கருத்தரங்கம், சென்னை தி.நகர்- சர். பி.டி. தியாகராயர் அரங்கத்தில் இன்றுமாலை (28.01.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு எடிட்டர்ஸ் கில்டு தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான திருஞானம் நிகழ்வை முன்னெடுத்ததோடு தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று பேசினார்.
கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி, மேனாள் குடியரசுத்தலைவர்- நினைவில் வாழும் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் சிறப்புரையாற்றினர்.
ச.ம.உ. க்களான சிவிஎம்பி எழிலரசன், ஆளூர் ஷாநவாஸ், மேனாள் ச.ம.உ., அ.கணேஷ்குமார் மற்றும்
பத்திரிகையாளர்கள் ஜென்ராம், கவிதா முரளீதரன், மு.அசீஃப் (சென்னை பத்திரிகையாளர் மன்ற பொதுச்செயலாளர்) , இந்திரகுமார்தேரடி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சிந்தன், சமூக செயற்பாட்டாளர் மதூர்சத்யா கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு எடிட்டர்ஸ் கில்டு செயலாளர் மு.கதிரவன் மிகச் சிறப்பான முறையில் கருத்தாளுமைகளை அறிமுகப்படுத்தி வைத்தும், கல்வி உரிமை கருத்தரங்கம் நடத்தவேண்டிய அவசர -அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். பேராளர்களின் வருகையின் போதும், மாணவர்கள் -பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையின் போதும் அரங்கத்தின் வாசல்வரை வந்து வரவேற்று நிகழ்வினை இனிமையாக்கியது சிறப்பு.
பத்திரிகையாளர் திருஞானம் பேசும் போது,
“இன்றைய சூழலில் கல்விக்கான உரிமை குறித்து பேசவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளோம். பேசியே ஆகவேண்டும். கல்வி, விஞ்ஞானம், மருத்துவம் எல்லாமே தவறான பாதை நோக்கிய பயணத்துக்கு
அவர்கள் வித்திட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் சொல்லாகவே சொல்கிறேன், கோமியத்தை உட்கொண்டால் மிகப்பெரிய உடற்கேடு உண்டாகும் என்பது மருத்துவர்கள் கூற்றாக இருக்க, கோமியத்தால் மனிதகுலத்துக்கு எத்தனை பயன்கள் என மேனாள் ஆளுநர் தமிழிசை அவர்கள் பட்டியலிடுகிறார். அதற்கு வலுசேர்ப்பது போல், வீட்டு வாசலில் அந்தக் காலங்களில் முன்னோர்கள், சாணம் மெழுகி கோலம் போட்டதை குறிப்பிட்டு ஒப்பீடு செய்கிறார். இத்தனைக்கும் திரு. தமிழிசை அவர்கள் அலோபதி மருத்துவர். அவருடைய கருத்தை கண்டித்து ஏராளமான மருத்துவர்கள் புகாரே கொடுத்திருக்கிறார்கள்” இவ்வாறு திருஞானம் பேசுகையில் குறிப்பிட்டார்.
மகள் திருமணத்தை இன்று காலை நடத்தி முடித்து வைத்த கையோடு மாணவ சமுதாயத்தின் முக்கிய விவகாரத்தை விவாதிக்க சென்னைக்கு திரும்பிய அமைச்சர் கோவி.செழியனின் பண்பு வெகுசிறப்பு.
ந.பா.சேதுராமன்