விஷமுள்ள உயிரிகள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் தேளுக்கு அதில் தவிர்க்க முடியாத இடமுண்டு என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தேளின் விஷம் கோடிகளில் விலைபோகும் விற்பனைப் பொருளாக இருக்கிறது என்பது தெரியுமா?
துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில், தினமும் சுமார் இரண்டு கிராம் தேள் நஞ்சு எடுக்கப்படுகிறது. தேள்களை பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்த பிறகு, சிறு துளி நஞ்சை அவை வெளியிடும் வரை ஆய்வக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். பிறகு, அது உறைய வைத்து, பொடியாக்கி விற்பனை செய்யப்படுகிறது.இதற்காக தேள் பண்ணை ஒன்றையும் நடத்தி வருகிறார் மெடின் ஓரன்லர் என்பவர். தங்கள் தேள் பண்ணை குறித்து பிபிசியிடம் தெரிவித்தபோது, எங்களிடம் தற்போது 20,000க்கும் அதிகமான தேள்கள் உள்ளன. நாங்கள் அவற்றுக்குத் தேவையான உணவளித்து முறையாக பராமரித்து, இனப்பெருக்கம் செய்யவைக்கிறோம். அதன் மூலம் அவற்றிலிருந்து எங்களுக்கு கிடைக்கும் நஞ்சை உறைய வைத்து, அதைத் தூளாக மாற்றி ஐரோப்பாவுக்கு விற்பனை செய்கிறோம்.” என்கிறார்.
ஒரு தேளில் 2 மில்லிகிராம் நஞ்சு உள்ளது. 300, 400 தேள்களில் இருந்து எங்களுக்கு ஒரு கிராம் நஞ்சு கிடைக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தேள் கொடுக்கு
விற்பனை செய்கிறார்கள் என்றால், விலை என்ன என்பதுதானே அடுத்த கேள்வி. ஒரு லிட்டர் தேள் நஞ்சின் விலை 10 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகிறது என்று அவர் தெரிவிக்கிறார் .
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?
பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர்
மருத்துவ சிகிச்சையில் தேள் விஷம்
மத்திய, தென் அமெரிக்க பகுதியைச் சேர்ந்த தேள்களின் கொடுக்குகளில் இருந்து எடுக்கப்படும் மார்கடாக்சின் என்ற பொருள் மூலம், ரத்த நாளங்களில் புதிய ரத்த செல்கள் உருவாவதுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளின்போதும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5 செ.மீ முதல் 8 செ.மீ வரை வளரக்கூடிய இந்த வகை தேள்கள் மனிதர்களுக்கு உயிர் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல. எனினும் வலிமிகுந்த வீக்கத்தை ஏற்படுத்தவல்லவை.
லீட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியரும் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கியவருமான டேவிட் பீச், இந்த தேள்களின் விஷம் நம்ப முடியாத அளவுக்கு திறன் வாய்ந்ததாக உள்ளது” என்று தெரிவிக்கிறார்.
மருந்தாக இதைக் கருதினாலும், வழக்கமான மருந்துகள் போல உட்கொள்ளவோ, சுவாசிக்கவோ, உடலில் செலுத்திக்கொள்ளவோ ஏற்ற வடிவில் இல்லை. ஆனால், ஸ்ப்ரே வடிவில் நரம்புகளில் பயன்படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.
பாம்பு விஷத்தை உடலில் செலுத்தி மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்துக்கு முயற்சி
பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை, த வெல் கம் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (British Heart Foundation, The Wellcome Trust, Medical Research Council) ஆகிய மூன்று அமைப்புகளின் கூட்டு நிதி உதவியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2010 ஆம் ஆண்டு நடந்த இந்த ஆய்வு முதல், 2020ஆம் ஆண்டு வெளியான ஆய்வு வரை தேள்களின் விஷம் மருத்துவ ரீதியிலான பயன்பாட்டு பொருளாக பயன்படுத்தப்படும் என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, மருத்துவ ஆராய்ச்சியில் பல்வேறு புதிய ஆய்வுகளுக்கும் பாதை அமைத்துள்ளது
இந்த நிலையில், தேள் விஷம் தற்போது வணிகப்பொருளாக மாறி, கோடிகளில் விற்பனையாகும் பண்டமாகியுள்ளது. தேளில் இருந்து எடுக்கப்படும் நஞ்சு, நோயெதிர்ப்பு மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வலி நிவாரணிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, விஷமுறிவு மருந்துகள் தயாரிப்பிலும் விஷமுறிவு சிகிச்சை முறையின் புதிய முன்னெடுப்புகளிலும் தேள் விஷம் பெருமளவு பயன்படும் என்றும் 2020 ஆண்டு தேசிய மருந்துகள் நூலகத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.