பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடு;

0
139

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்.

ஒரு வகுப்பில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் ஒரு தொகுதிக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும். ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால் கூடுதல் இருக்கைகளை அமைப்பதன் மூலம் அதிக மாணவர்களுக்கு இடம் அளிக்கலாம்.

இதுபோன்ற நிலையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு அறைகளில் கற்றுக் கொடுக்கப்படலாம். அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இணையதள வழி- தொலைத்தூர கற்றல் முறை தொடரும். மாணவர்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கலாம்.

தனியார் பள்ளி நிர்வாகிகள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்கலாம்.

பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குவர அனுமதிக்கப்படுவர். பெற்றோரின் சம்மத்துடன் வீட்டில் இருந்து படித்து வரும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம்.

மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்படும்.

பள்ளிகளை திறப்பதற்கு முன்பு ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் தெளித்து பள்ளி வளாகம், தளவாடப் பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத்துறையால் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி பயன்பாட்டுக்கு வைத்திருக்கப்பட வேண்டும்.

பள்ளிகளின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது செயல்படும் இடங்களில் கிருமி நாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.

உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், பள்ளி வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றி திரிய அனுமதிக்கக் கூடாது. நுழைவாயில் மற்றும் பள்ளிக்குள் வரிசையில் நிற்கும் போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நீச்சல் குளங்களை மூட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாட வேளைகள் அனுமதிக்கப்படாது. நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படாது.

வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருதல், வெளியேறுதல் ஆகியவற்றுக்கு வெவ்வேறு நேரத்தை நிர்ணயிக்கலாம். வருவதற்கும், செல்வதற்கும் பள்ளிகளில் வெவ்வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.

வரிசையில் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான இடங்களில் வட்டம், கட்டம் போன்ற குறியீடுகளை தரையில் வரைந்து வைக்க வேண்டும்.

வகுப்பறையில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆசிரியர் அறைகள், அலுவலக பகுதிகள் மற்றும் பிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

வானிலையை பொறுத்து ஆசிரியர்-மாணவர் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்காக வகுப்பறைக்கு வெளியே உள்ள இடங்களையும் பயன்படுத்தலாம்.

வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இடைவேளை நேரம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இடையே உணவு பகிர்வு அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் அனைத்து தனியார் பள்ளி விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here