நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.:

0
300

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்…
“உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று…

மகள், “தம்பி வேண்டும்” என்றாள்.

“யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க, “ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!” என்றாள்.

“அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்” என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால்,
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி – கேட்பதென்னவோ பிச்சை தான்.

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here