தை அமாவாசை- முன்னோர்களின் ஆசி, நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்;

0
44

🌚 *தை அமாவாசை*

*எல்லோரையும் வாழ்விக்கும் தை அமாவாசை வழிபாடு!*

*2024ல் தை அமாவாசை தை 26ம் தேதி (பிப்ரவரி 09) வெள்ளிக்கிழமை வருகிறது.*

*பிப்ரவரி 09ம் தேதி பகல் 07:53 மணி முதல் அமாவாசை* *திதி தொடங்கி மறுநாள் அதிகாலை 04:34 வரை உள்ளது.*

*அதனால் பிப்ரவரி 09ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.*

 

அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி மரியாதை செய்யக் கூடிய விரத நாளாகும். அமாவாசை தினத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக் கூடிய மிகச் சிறந்த நாள். அமாவாசைக்குப் பின்னர் வளர் பிறை வருகின்றது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் நிலா வளர்வதாக ஐதீகத்தின் பெயரில் அமாவாசை சிறப்பு பெறுகின்றது.

காலம் காலமாய் நம் வாழ்வு செழித்திருக்க தெய்வப் பலமும், முன்னோர் ஆசியும் அவசியம் தேவை. இந்தப் பேறுகளைப் பெற, அவசியமான சில வழிபாடு களைச் செய்யச் சொல்கின்றன நம் ஞான நூல்கள்.
அவற்றில் ஒன்றுதான் தை அமாவாசை. வருடத்தில் மூன்று அமாவாசை தினங்கள் முக்கியத் துவம் பெறும். அவற்றில் ஒன்று உத்தராயனப் புண்ணிய காலத் தொடக்கமான தைமாதத்தில் வரும் அமாவாசை. மகத்துவம் நிறைந்த இந்த நாளில் செய்ய வேண்டிய முன்னோர் வழிபாட் டின் அவசியங்கள் குறித்து ஞான நூல்கள் விளக்குகின்றன.

தை அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் நல்லாசியால் அளவற்ற நன்மைகள் உண்டாகும். பித்ரு கடன்களை நிறைவேற்றினால் நன்மைகள் பெருகும் என்று சிவபெருமானே ஸ்ரீராமபிரானிடம் கூறியிருக்கிறார். சிவபெருமான் கூறியதைக் கேட்ட பின்பே, ஸ்ரீராமர் தன்னுடைய தந்தை தசரத சக்ரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தண்ணீரால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.

ஓர் ஆண்டில் 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். குறைந்தபட்சம் ஆண்டுக்கு மூன்று முறையாவது நம் முன்னோரை உரிய காலத்தில் வழிபட வேண்டியது அவசியம். அவ்வாறு செய்வது நமக்கு நன்மை பயக்கும்.

தை அமாவாசை
புனிதமான இந்தத் தர்ப்பணங்களைச் செய்யாமல் இருந்தால், குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, எதிர்மறை எண்ணங்கள், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டு நிம்மதி யைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.

மேலும் நாதி தோஷம், பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் தொடரும் சிக்கல்களால் பலவித துன்பங்களும் நேரலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.

இவ்வித பாதிப்புகள் நம்மை அணுகாமல் இருக்க, தை அமா வாசை முதலான தினங்களில் உரிய முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்யவேண்டும்.

சூரியன் பித்ருகாரகன், சந்திரன் மாத்ருகாரகன். எனவே சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை புண்ணிய தினத்தில் தாய், தந்தை வழி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்விப்பது புண்ணிய காரியமாகும். மூன்று தலைமுறையாக வாழ்ந்த நம் முன்னோருக்குச் செய்கிற வழிபாடு, நிச்சயம் நம்மையும் நம் சந்ததியையும் குறையின்றி வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

*தர்ப்பணம்:-*

மாதம்தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்ய இயலாமல் போனவர்கள், தை – ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை தினத்திலாவது முன்னோரை வழிபட்டு வரம் பெற வேண்டும்.

சூரியன் தன்னுடைய வடதிசை பயணம் துவக்கும் உத்தராயண மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை திதி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காரணம், அந்த நாளில் தான் நம்முடைய முன்னோர்கள் நாம் செய்யும் தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் பித்ரு லோகம் செல்லும் நாளாகும். தை அமாவாசை நாளில், கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது, இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரின் மிக முக்கிய ஆன்மீகக் கடமையாகும்.

இந்தத் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் சில உண்டு.

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாள்களில், வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது. சிராத்தம், தர்ப்பணம் செய்கிற வேளையில் பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது.

சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்கள் நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. பூஜையின்போது பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய காரியங் களைச் செய்யக்கூடாது.

பித்ருக்களுக்கு வைக்கப்பட்ட பிண்டங்களை நீர்நிலைகளில் சேர்க்கலாம். பித்ரு காரியங்களைச் செய்தபிறகு, தான தருமங்கள் செய்வதால் கூடுதல் பலன் உண்டு.

அன்று ஓர் ஏழைக்காவது உணவிடுதல் நலம் பயக்கும். வழக்கம் போல காக்கை, பசுக்களுக்கு உணவிடுவதும் நல்லது.

புனித நீராடுதல், விரதம் இருப்பது, மாலையில் ஆலய தரிசனம் என அனைத்தும் நம்மைப் புண்ணியவானாக்கும்.

பூஜை, பரிகாரத்திற்கு ராகு காலம், எமகண்ட காலத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.

தை அமாவாசை தினத்திற்காக இப்போதே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

பித்ரு காரியம்
பிதுர் தர்மங்களைச் செய்யச்சொல்லும் நம் ஞானநூல்கள், நம் முன்னோர்களை அவர்கள் வாழும் காலத்தில் மிக மரியாதையுடனும் வணக்கத்துடனும் நடத்தும்படி அறிவுறுத்துகின்றன.

அமரத்துவம் பெற்ற முன்னோர்களுக்குத் தர்ப்பண வழிபாடுகளைச் செய்யச் சொல்லி அறிவுறுத்துகின்றனர். இதனால் கிடைக்கும் புண்ணியம் மிக மேலானது என்கிறது கருடபுராணம்.

சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் ஆகியவை அனைத்தும், நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்விக்கும். மகிழ்ந்து அவர்கள் தரும் ஆசி, நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.

எனவே வரும் தை அமாவாசைத் திருநாளில் புண்ணிய நதி தீரங்களிலோ, அல்லது உங்கள் வீடுகளிலோ, அவரவர் வழக்கப்படி முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளைச் செய்து, ஏழேழு தலைமுறைக்கும் புண்ணிய பலன்களைப் பெற்று வாழுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here