வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள உழவர் சந்தை எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதியாகும். காய்கனிகள் வாங்க வேண்டும் என்றால் கூட இப்பகுதிக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரயில்வே மேம்பாலத்தின் அருகே இரு பக்கத்திலும் நிறுத்திவிட்டுதான் உழவர் சந்தைக்கு வந்து செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வந்தது. இதில் பல இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு போவதும் வழக்கமாக இருந்து வந்தது. இதை காவல்துறையினர் கண்டும் காணாமல் விட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடலூர் -சித்தூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பினால் நாள்தோறும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதை போக்குவதற்காக ரயில்வே புதிய கூடுதல் மேம்பாலம் ஒன்றை அமைக்கும் பணிக்கான நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான டெண்டரையும் விட்டுவிட்டது. ஆனால் பணிகள் தொடங்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது. இந்நிலையில் அவர்கள் பணியை தங்குதடையின்றி தொடங்குவதற்கு தடையாக இருந்த ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படாமல் அப்படியே இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்னும் இரண்டு நாட்களுக்குள் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் காட்பாடி உழவர் சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள இருபக்க சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் அகற்றும் பணியில் அதிரடியாக ஈடுபட்டனர். குறிப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி பாரபட்சம் ஏதாவது காண்பித்தால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.